அனைவரதும் நம்பிக்கைக்குரியவராக மாற வேண்டுமெனில், கருணை மற்றும் நேர்மை என்பன அவசியமென்று உலகுக்கு சுட்டிக்காட்டிய முஹம்மத் நபி அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது. 

எந்தவொரு சமூகத்திலும் வாழ்கின்ற மனித குலத்தின் சிந்தனை மற்றும் நடத்தை என்பவற்றின் அடிப்படையாக அமைவது, அவர்கள் நம்பிக்கைக் கொண்டு ஏற்றுக்கொள்கின்ற ஆழமான மார்க்கமே ஆகும் என இன்றைய மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வௌியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறைவன் நேர்மையுள்ள மனிதர்களுக்கு கருணை காட்டுவதோடு, அவ்வாறான மனிதர்களுக்குத் தகுதியான உயர் அந்தஸ்த்து வழங்கப்படுவதை, முஹம்மத் நபி அவர்களின் வாழ்க்கை மற்றும் முன்மாதிரியான நடத்தை என்பவற்றை ஆழமாகக் கற்கும்போது விளங்கிக்கொள்ள முடிகிறது எனவும் ஜனாதிபதியின் மீலாதுன் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை உட்பட உலகவாழ் அனைத்து முஸ்லிம்களினதும் கௌரவத்துக்குரிய முஹம்மத் நபி அவர்களின் வழிகாட்டல்களை மேலும் சமூகமயப்படுத்தி ஒற்றுமையை உருவாக்குவதே முஸ்லிம்கள் நபி அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய விசேட கௌரவமாகும் என்று தாம் நினைப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவர்களின் வாழ்வு முழுவதும் மனித நலனைக் கருத்திற்கொண்டு கடைபிடித்து வந்த குணாம்சங்களை, ஏனைய காலங்களை விடவும் தற்போதைய சூழ்நிலையிலேயே சமூக நலனை மேம்படுத்துவதற்காகப் பயன்படுத்துவது பொருத்தமானதாக அமையும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றும், உலக மக்களின் மரியாதைக்குரிய நபி அவர்களின் வாழ்க்கை வழிகாட்டல்களை கௌரவத்துடன் பின்பற்றி வருகின்ற இலங்கை முஸ்லிம்கள் உட்பட உலகவாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் சுபீட்சமும் சௌபாக்கியமும் உருவாக வேண்டுமென பிரார்த்திப்பதாக ஜனாதிபதியின் மீலாதுன் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (kandytamilnews.com)



Post a Comment

أحدث أقدم