கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிராக பத்தரமுல்ல பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டு கொவிட் தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 22 செயற்பாட்டாளர்கள் இன்று (16-07-2021) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவில், விமானப்படைத் தளத்தில் கடந்த ஒருவார காலமாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 16 பேர் மற்றும் கண்டி பள்ளேகலை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த ஐவருமாக 22 செயற்பாட்டாளர்கள் இன்று விடுவிக்கப்பட்டனர்.

இலங்கையில் கொவிட்-19 பரவல் காரணமாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக கைதுசெய்யப்பட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் பஸ்களில் ஏற்றப்பட்டு அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

இதனையடுத்து, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்த சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இந்த செயற்பாட்டை வன்மையாகக் கண்டனத்திற்கு உட்படுத்தியிருந்தன.

அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தைப் பயன்படுத்தமைக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம் வௌியிட்டிருந்தது.

14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த போதிலும், செயற்பாட்டாளர்கள் 22 பேரும் ஒரு வாரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

أحدث أقدم