காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்குப் பதிலாக அன்னாரின் புதல்வரான ஜீவன் தொண்டமானுக்கு நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனு பெற்றுத்தருமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் குழு கூடி இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் காங்கிரஸின் அரசியல் குழு உறுப்பினர்கள் இன்று (27-05-2020) விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து பிரதமரை சந்தித்து இதுகுறித்து கலந்துரையாடியதாக பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரான செந்தில் தொண்டமான் கட்சியின் அரசியல்குழு தீர்மானத்தின் பிரகாரம் பிரதமரிடம் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் அங்கத்துவ கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்படுவதுடன், கூட்டணி சார்பாக தேர்தலிலும் போட்டியிடுவதற்கு தயாராகவிருந்தது.
ஆறுமுகன் தொண்டமான் நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததை அடுத்து அவரது மறைவின் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ஜீவன் தொண்டமானுக்கு சந்தர்ப்பத்தை வழங்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதமரிடம் கோரியுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தீர்மானத்தை வரவேற்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, அதுகுறித்து தாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியுள்ளார் என பிரதமரின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.






Post a Comment