பெண் ஊடகவியலாளர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான “பாதுகாப்பான சகோதரிகள்” என்ற பயிற்சிநெறியை வழங்கிய இன்டர்நியுஸ் ஸ்ரீலங்கா அமைப்பு, பயிற்சியின் பின்னர் குறித்த பாடவிதானம் தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த பயிற்சிநெறியை பூர்த்திசெய்த ஊடகவியலாளர்கள், பயிற்சிப்பட்டறைகள், ஆய்வுகள், விழிப்புணர்வு செயற்பாடுகள், விவரணங்கள் என பல செயற்திட்டங்களை முன்னெடுத்தனர்.
இவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, அண்மையில் சம்பந்தப்பட்ட ஊடகவியலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களில் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிப்பட்டறையை நடத்திய ஊடகவியலாளர் நிரஞ்சனி ரோலண்டிற்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.
டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான ஆய்வை மேற்கொண்டமைக்காக ஊடகவியலாளர்களான கலாவர்ஷ்னி கனகரட்ணம் மற்றும் சாரா பத்திரண ஆகியோருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான மற்றுமொரு பயிற்சிப்பட்டறைக்காக, நுஹா நிஸார் மற்றும் ஜனனி கருணாவீர ஆகியோருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.
பயிற்சிப்பட்டறையில் ஏனைய ஆக்கங்களை முன்வைத்த ஷேலனி நிமந்திகா பலிஹவதன, பிரியதர்ஷனி சிவராஜா, பியுமி வட்டுஹேவா, மனிஷா பால்ராஜ், பபா மாலிதி பியரத்ன மற்றும் திலினி டி அல்விஸ் ஆகியோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குறித்த ஊடகவியலாளர்களை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றும் வகையில், அவர்களை பயிற்றுவிப்பாளர்களாக உருவாக்கும் பயிற்சிகளும் வழங்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பான பயிற்சிநெறியை இந்தோனேஷியாவைச் சேர்ந்த டிஜிட்டல் பாதுகாப்பு பயிற்றுவிப்பாளர் டீட்டா கட்டுரனி மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு ஆலோசகரும் பயிற்றுவிப்பாளருமான விபூஷி பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னெடுத்தனர்.
பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறியை தகவல்தொடர்பு நிபுணரும் பிரபல பயிற்றுவிப்பாளருமான யுக்தி கே. குணசேகர வழங்கினார்.
Post a Comment