கொழும்பில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருக்கும் வௌியிடங்களைச் சேர்ந்த மேலும் 500 பேரை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த 500 பேரையும் இன்று (05) காலை 7 மணிக்கு கொழும்பில் இருந்து அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

நுகேகொட பொலிஸ் பிரிவினால் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவர்களை நுகேகொட பொலிஸ் மைதானத்திற்கு அழைத்து தேவையான சுகாதார ஆலோசனைகள் மற்றும் தனிமையிலிருத்தல் தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மேல் மாகாண ஆளுநர் தலைமையில், மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் இணைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளார்.

வைத்திய பரிந்துரைக்கு அமைவாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், நீண்டகால நோய்களுக்காக சிகிச்சை பெறுகின்றவர்கள் ஆகியோரே தமது சொந்த இடங்களுக்கு செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த 500 பேரும் தமது சொந்த இடங்களுக்குச் சென்றதும், அங்கு சுயதனிப்படுத்தலில் ஈடுபடுவதற்கான வாக்குறுதியுடன் திருப்பியனுப்பப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


Post a Comment

Previous Post Next Post