முப்படைகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்காக பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்படுவதாக வௌியான தகவல் உண்மையில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தௌிவுபடுத்தப்பட்டுள்ளது.

முப்படைகளையும் சேர்ந்த உறுப்பினர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைப்பதற்காக பாடசாலைகளை தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றுவதற்கான எந்தவொரு பணிப்புரையும் விடுக்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறியுள்ளார்.

அத்துடன் இராணுவத் தரப்பு உறுப்பினர்களை தனிமைப்படுத்தி வைப்பதற்காக எந்தவொரு பாடசாலையும் அவ்வாறு பயன்படுத்தப்படவும் இல்லையென பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, முப்படைகளைச் சேர்ந்தவர்கள் மீண்டும் அவரவர்களின் முகாம்களுக்குத் திரும்புவதற்காக அனைத்து விடுமுறைகள் மற்றும் குறுங்கால விடுமுறைகளை இரத்து செய்வதாக அறிவித்ததை அடுத்து, முப்படை உறுப்பினர்கள் அவர்களின் முகாம்களுக்கு திரும்பியுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post