அறியாமை இருளகற்றி மனதை ஒளிரச் செய்யும் ஞான ஒளியேற்றலையே தீபாவளித் திருநாள் குறிக்கின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிடுகின்றார்.

உலகலாவிய இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகவும் சிறப்புமிக்க ஒன்றாக தீபாவளித் திருநாள் கருதப்படுகின்றது. இந்துக்களின் ஆன்மீக வழிபாடாகவும் பாரம்பரிய கலாசாரப் பெருவிழாவாகவும் காணப்படும்  தீபாவளித் திருநாள் மூலம், வாழ்வின் துன்பங்கள் நீங்கி இன்பங்களை அடைந்துகொள்வதே நோக்கமாகும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்துக்களின் நன்நாளான இன்றைய தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தத் தீபத்திருநாள், அறத்தின் ஆட்சியையும் ஆணவத்தின் வீழ்ச்சியையும் குறிக்கின்ற நாளாகும். தாமதித்தாலும் வாய்மையே இறுதியில் வெல்லும் என்பதையும் காரிருள் மறைந்து, இன்பங்கள் பெருகி, நலமும் வளமும் பெருகும் என்பதே இந்துக்களின் நம்பிக்கையாகும் என ஜனாதிபதி அதில் சுட்டிக்காட்டியுள்ளார். 

சுற்றாடலுடன் ஒன்றுபட்டுள்ள பருவ மாற்றங்களோடு, பண்டைய காலந்தொட்டு மானிடர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஆன்மீகப் பரிமாறல்ளை மிகவும் உற்சாகமாகவும் பக்தியுடனும் கொண்டாடுகின்ற தீபாவளி நன்நாள், சிறுவர் முதல் பெரியோர் வரை அனைவருக்கும், மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் ஏற்படுத்துகின்றது எனவும் தீபாவளி செய்தியில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தீபாவளித் திருநாளில் பிரபஞ்சத்துக்கு பிரவேசமாகும் சுப சக்தியால் உலக மக்கள் யாவருக்கும் மகிழ்ச்சி, சௌபாக்கியம், செல்வம் மற்றும் தெய்வ அருள் கிடைக்கவேண்டும் என்று, இந்தத் தீபத் திருநாளில் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார். (kandytamilnews.com)


Post a Comment

Previous Post Next Post