“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் ஆரம்பம்…
“ஒரே நாடு, ஒரே சட்டம்” தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள், நேற்று (20) வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டன.
இன்றைய தினமும் (21) யாழ்ப்பாணம் வலம்புரி மண்டபத்தில் இதற்கானப் பணிகள் தொடர்ந்தன. சட்டத்தரணிகள், தொழில் வல்லுநர்கள், மதத் தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குச் சட்டத்தை சம அளவில் செயற்படுத்துவது தொடர்பில் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களை கேட்டறிவது, இந்த ஜனாதிபதி செயலணியின் நோக்கமாக உள்ளது.
நாளைய தினம் (22), முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்களின் கருத்துக்களை கேட்டறியும் பணிகள் தொடரவுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் ஏனைய எட்டு மாகாணங்களிலும் உள்ள மக்களின் கருத்துக்களை கேட்டறிய எதிர்பார்த்துள்ளதாக செயலணி அறிவித்துள்ளது.
இலங்கைக்குள் “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினர் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் கருத்துகளைக் கருத்திற்கொண்டு, செயலணியின் நோக்கத்துக்கமைய அவற்றை ஆராய்ந்த பின்னர், அதன் அடிப்படையில் இலங்கைக்கு ஏற்ற வகையில் செயற்திட்ட வரைபு ஒன்றைத் தயாரிப்பதற்காக, 2021 நவம்பர் 30ஆம் திகதியன்று இந்தச் செயலணி உருவாக்கப்பட்டது.
'ஒரே நாடு, ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதி செயலணி
த.பெ. எண். 504,
கொழும்பு.
என்ற முகவரிக்கு அல்லது ocol.consultations@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்களுடைய கருத்துக்கள் மற்றும் யோசனைகளை அனுப்பி வைக்க முடியும்.
இன்று முதல், தனிப்பட்ட முறையிலும் இச்செயலணிக்கு கருத்துகளைத் தெரிவிக்க முடியும் என்று செயலாளர் அறிவித்துள்ளார். (kandytamilnews.com)
Post a Comment