அத்தியாவசியமற்ற பொருள் இறக்குமதிக்காக விதிக்கப்பட்டிருந்த 100% கட்டாய வைப்பீட்டு எல்லையை இன்று முதல் நீக்கிக் கொள்வதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
பேரண்டப் பொருளாதார மற்றும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை நிச்சயப்படுத்துவதற்கான ஆறு மாதகால வழிக்காட்டலை இன்று (01) வௌியிட்டபோதே மத்திய வங்கியின் ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இன்று முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.
குறிப்பாக எதிர்வரும் ஆறு மாதகாலத்திற்குள் சொத்துகளை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாதிருக்குமாறு அனைத்து வங்கிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இதன்போது ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களின் பழைய கடன்கள் மற்றும் வட்டி என்பவற்றிக்காக நிவாரணம் வழங்குவதற்காக மத்திய வங்கியினால் 15 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வாகனங்களை மீள கையகப்படுத்தலை இடைநிறுத்துமாறும் வங்கிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கூறியுள்ளார்.
தற்போது இலங்கை மத்திய வங்கியிடம் சுமார் 5 பில்லியன் பெறுமதியான கையிருப்புகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஆளுநர், 2021 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 5.6 பில்லியன் தொகை மீள செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையிடம் 7.6 பில்லியன் டொலர் கையிருப்பு காணப்பட்டதாகவும், அதன் பின்னர் 6 பில்லியன் கடனைச் செலுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் கடன் செலுத்துவதற்கு முடியாத சூழ்நிலை ஏற்படும் என சிலர் எதிர்வுகூறியுள்ள போதிலும், அவ்வாறு இடம்பெறாமலும், பொருளாதாரத்தை வீழ்ச்சியடைச் செய்யாமலும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இயலுமை காணப்படுவதாக அஜித் நிவாட் கப்ரால் மேலும் கூறியுள்ளார். (Kandy Tamil News)
Post a Comment