அமைச்சரவை அந்தஸ்துடைய முக்கிய சில அமைச்சுப் பொறுப்புகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வௌிவிவகாரம், கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், மின்வலு, ஊடகம் ஆகிய அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பொறுப்புகள் இன்று (16-08-2021) மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வௌிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், வௌிவிவகார அமைச்சராக பொறுப்பு வகித்த தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பவித்ரா வன்னியாராச்சி வகித்துவந்த சுகாதார அமைச்சு, அவரிடமிருந்து ஊடக அமைச்சராக செயற்பட்ட கெஹெலிய ரம்புக்வெலவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் போக்குவரத்து அமைச்சுப் பொறுப்பு பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின்வலு அமைச்சர் பொறுப்பு காமினி லொக்குகேயிடமும், ஊடகத்துறை அமைச்சுப் பொறுப்பு டலஸ் அலகப்பெருமவிடமும் ஜனாதிபதியினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவுக்கு மேலதிகமாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அபிவிருத்தித் தொடர்பாடல் கண்காணிப்பு அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. (KandyTamilNews)


Post a Comment

Previous Post Next Post