குடியுரிமை பறிப்புக்கு பொறுப்புகூறும் வகையில் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் விசேடமாக உறுதி செய்யப்படல்  வேண்டும்:
- தேர்தல் மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கோரிக்கை 

இலங்கை சுதந்திரம் அடைந்தபோது குடியுரிமையும்  வாக்குரிமையும் பறிக்கப்பட்ட 1948 ஆம் ஆண்டிலேயே ஏழு பாராளுமன்ற உறுப்புரிமையை கொண்டிருந்த மலையக தமிழர் சமூகம் 1980 க்குப் பின்னர் தமக்கு மீளவும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி விகிதாசார பிரதிநிதித்துவத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

அது உரிய எண்ணிக்கை அல்லாத போதும் இயலுமான எண்ணிக்கையை எல்லா தேர்தல்களிலும் பாராளுமன்றம், மாகாண சபை , உள்ளூராட்சி சபைகளில் பிரதிநிதித்துவம் இடம்பெற்று வந்தது. 

இந்த நிலைமையில் தேர்தல் முறைமை மாற்றம் பெறுமானால் மலையக சமூகம் மீண்டும் 1948 - 1977 காலப்பகுதிக்கு செல்ல நேரிடும் அச்சம் மலையக மக்கள் மத்தியில் நிலவுகிறது. 

நாடு தவிர்க்க முடியாத வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் இருந்து கலப்பு முறைக்கு செல்லும் நிலை வந்தால், ஆகக் குறைந்தது தற்போதைய அரசியல் பிரதிநிதித்துவ எண்ணிக்கையில் குறைவு ஏற்படுத்தாத முறைமை குறித்து குழு கவனம் செலுத்துதல் வேண்டும்.

மலையக மக்கள் மீண்டும் அரசியல் உரிமை இழக்கும்  நிலையை உருவாக்காமல், குடியுரிமை பறிப்பு தவறை ஏற்று அதற்கு பொறுப்புக்கூறும் வகையில் சிறு தேர்தல் தொகுதிகளை பாராளுமன்ற தேர்தலுக்காக உருவாக்கி  மலையக சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் விசேடமாக உறுதி செய்யப்படல்  வேண்டும்  எனவும் கருத்து பதிவு செய்யப்பட்டது. 

இலங்கையில் தேர்தல் முறைமை மறுசீரமைப்பு நோக்கத்தில் பாராளுமன்றத்தில் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு பொதுமக்களிடத்தில் முன்மொழிவுகள் கோரப்பட்டுள்ள நிலையில் அந்தக் குழுவுக்கு மலையகம் தழுவிய முன்மொழிவுகள் பலவற்றை பல்வேறு தரப்பினரும்  பல எண்ணிக்கையில் அனுப்பி வைக்க  வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், தூய அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான மார்ச் 12 தேசிய இயக்கத்துடன் இணைந்து நடாத்திய இணைய வழிக் கலந்துரையாடலில் மேற்படி விடயம் பதிவு செய்யப்பட்டது. 

நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை, காலி, மாத்தறை, மொனராகலை, குருநாகல் உள்ளிட்ட பெருதோட்ட மாவட்டங்களும் கொழும்பு, கம்பஹா,வன்னி என பெருந்தோட்டம் சாராத மாவட்டங்களிலும் எனப் பரவலாக வாழும் மலையகத் தமிழ் சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் முன்மொழிவை தயார் செய்யும் நோக்கோடு இந்த நிகழ்வு ஒழுங்கு செய்ப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தொடக்கவுரையில் தெரிவித்தார்.

அவ்வாறே அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சிவில் சமூக பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டு தமது கருத்துகளை முன்வைத்தனர்.

பிரதான உரையை மலையக மக்கள் முன்னணியின் முன்னாள் பொதுச் செயலாளரும்  அரசியல் ஆய்வாளருமான அ. லோரன்ஸ் வழங்கினார். பெபரல் அமைப்பின் சார்பில் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சார்பில் மஞ்சுல கஜநாயக்க, ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் சார்பில் கௌரீஸ்வரன், தேசிய சமாதான பேரவை சார்பில் கலாநிதி ஜெஹான் பெரேரா ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர். 

தமது முன் மொழிவுகளில் மலையக மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்குவதற்கு இந்த கலந்துரையாடலில் உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- மயில்வாகனம் திலகராஜ்

2 Comments

  1. இதனை வரவேற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete

Post a Comment

Previous Post Next Post