இலங்கையில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளான 32 பேர் இன்று (20) அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் பரவ ஆரம்பித்து சுமார் ஒன்றரை மாதகாலப்பகுதியில் ஒ​ரே நாளில் அதிகபட்ச நோளாயர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதன் பிரகாரம் நாட்டில் கொவிட் வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த மார்ச் 02 ஆம் திகதி (02-03-2020) முதல் 31 ஆம் திகதி வரையான ஒருமாத காலப்பகுதியில் 143 பேர் மாத்திரமே கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்தனர்.

இந்த நிலைமையின் கீழ், கடந்த 20 நாட்களில் அந்த எண்ணிக்கை இரண்டிப்பாக மாறியுள்ளது.

கடந்த ஒன்றரை மாத காலமாக நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் இன்று (20) கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி ஆகிய மாவட்டங்களின் அபாய வலயமாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் தவிர்ந்த நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது.

இந்த சூழ்நிலையின் கீழேயே இன்றைய தினம் மாத்திரம் 32 பேர் வைரஸ் தொற்றுக்குள்ளானமை பதிவாகியது.



இதனையடுத்து கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கான ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி (27-04-2020) திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post