நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மிகவும் பாரதூரமான சுகாதார பிரச்சினையாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது..

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப் பகுதியில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களை வீட்டிலிருந்தே கொள்வனவு செய்யக்கூடிய வகையில் தடையின்றி வழங்களை மேற்கொள்ளவும், அத்தியாவசிய பொருட்களை விநியோகிப்பதை முகாமைத்துவம் செய்வதற்குப் பொறுப்பான செயலணி அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் தனது விருப்பத்திற்கு அமைய எவரும் வீதிகளில் நடமாடக் கூடாது எனவும், செயலணியினால் அனுமதியளிக்கப்பட்டுள்ள வழங்கல் வாகனங்கள் மட்டும் வீதிகளில் பயணம் செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வேறு எந்த ஒரு வாகனமும் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரமின்றி பயணம் செய்ய முடியாது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கு இடையேயும் பயணம் செய்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை ஆங்காங்கே அழைத்துச் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகள், சிறு தேயிலை தோட்டங்கள் உள்ளிட்ட பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைகள் மற்றும் மீன்பிடி தொழிலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விமான நிலைய மற்றும் துறைமுக சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பொலிஸாரும் இராணுவத்தினரும் ஊரடங்கு சட்டதிட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலகத்தினால் ​மேலும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Previous Post Next Post